பரங்கிக்காய் ஓலன்
தேவையானவை:
பரங்கிக்காய் - கால் கிலோ, தேங்காய் எண்ணெய், கொப்பரைத் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பரங்கிக்காயை வறுவலுக்கு சீவுவது போல சீவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் சீவிய பரங்கிக்காயைப் போட்டு உப்பு, கொப்பரைத் துருவல் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கவும்.
மணக்கும் இந்த மலையாள சமையல்.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய்- மோர்க்குழம்பு
தேவையானவை:
பூசணிக்காய் - அரை கிலோ, தயிர் - ஒரு கப், மிளகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, தேங்காய் துருவல் -ஒரு கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
பூசணிக்காயைத் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, தேங்காயை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். பூசணித் துண்டுகளில் உப்பு சேர்த்து வேக விடவும். தயிரை நன்றாகக் கடைந்து, அரைத்த தேங்காய் விழுது, பூசணித் துண்டுகளைச் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இந்தக் குழம்புக்கு உருளைக்கிழங்கு பொரியல் நல்ல காம்பினேஷன்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை:
பரங்கிக்காய் - ஒரு சிறிய துண்டு, வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல், பால் - தலா ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவலை அரைத்து, அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு, பால் விட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
பாலும் வெல்லமும் சேர்ந்து வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்தக் கூட்டு. இது, சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.
--------------------------------------------------------------------------------
பூசணி தயிர் பச்சடி
தேவையானவை: பூசணிக் கீற்று - 2, தயிர், கேரட் துருவல், வெள்ளரித் துருவல் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
பூசணிக்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். தயிருடன் துருவிய கேரட், வெள்ளரி, கொத்தமல்லி, உப்பு, பூசணித் துருவலைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.
இது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான பச்சடி. உடல் சூட்டைக் குறைக்கும்.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய் பொரித்த கூட்டு
தேவையானவை:
பூசணிக்காய் கீற்றுகள் - 4, காய்ந்த மிளகாய் - 1, சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், தனியா - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல், தனியாவைப் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து, பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த பூசணிக்காயை சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
பருப்பு சேர்க்காத பத்தியக் கூட்டு இது. இதற்கு சுட்ட அப்பளம் சூப்பராக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 200 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மிளகு - 6, காய்ந்த மிளகாய் - 2, தக்காளிப்பழம் - 1, பரங்கிக்காய் (தோல் சீவி துருவியது) - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப் பருப்பு, துவரம்பருப்பை தனியாக ஊற வைக்கவும். அரிசியை அடை மாவு பதத்தில் அரைக்கவும். ஊற வைத்த கடலைப் பருப்பு, துவரம்பருப்பில் இஞ்சி, மிளகு, தக்காளி, காய்ந்த மிளகாயை சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் அரைத்த அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலந்து, பரங்கிக்காய் துருவல், கறிவேப்பிலை சேர்க்கவும். தோசைக்கல்லை காய வைத்து மாவை அடையாக ஊற்றவும். இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
இந்த அடை, தித்திப்பு கலந்த அட்டகாசமான சுவையில் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய் சாலட்
தேவையானவை:
பூசணிக்காய் - அரை கிலோ, முளை கட்டிய பாசிப்பயறு - ஒரு கப், வெள்ளரிக்காய், கேரட் - தலா 1, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை:
பூசணிக்காய், கேரட், வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். முளைகட்டிய பயறுடன் துருவிய காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி போட்டுக் கலந்து பரிமாறவும்.
வெயிலுக்கு ஏற்ற ஜில் சாலட் இது.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் இனிப்புப் பச்சடி
தேவையானவை:
பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப், புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், அச்சு வெல்லம் - 3, பச்சை மிளகாய் - 1, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பரங்கிக்காய் துண்டுகளில் புளிக் கரைசல், உப்பு சேர்த்து வேக விடவும். வெல்லத்தைப் பொடித்துப் போட்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து, கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
இனிப்பு, புளிப்பு, காரம் என கலந்துகட்டி ருசிக்கும் இந்தப் பச்சடி.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய் கீர்
தேவையானவை:
பூசணிக்காய் கீற்று - 2, பால் - ஒரு கப், பாதாம் பருப்பு - 4, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - அரை கப்.
செய்முறை:
பூசணிக்காயைத் தோல் சீவி நறுக்கி, வேக விட்டு அரைக்கவும். இதனுடன் பாதாம் பருப்பையும் தோல் உரித்து சேர்த்து விழுதாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, அதில் அரைத்த விழுதைப் போடவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
பூசணிக்காய் கீர் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் பாயசம்
தேவையானவை:
பரங்கிக்காய் கீற்று - 2, வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் -சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, பால் - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பரங்கிக்காயைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, நெய் விட்டு வதக்கி அரைக்கவும். இதில் வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆறியதும் கொதிக்க வைத்த பரங்கிக்காயில் சேர்த்து ஏலக்காய்த்தூளைப் போடவும். சிறிது நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து சேர்க்கவும்.
பண்டிகை நாட்களுக்கேற்ற புதுமையான பாயாசம் இது.
குறிப்பு: இதில் தேங்காய்ப்பாலை சேர்த்தும் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் காரக்குழம்பு
தேவையானவை:
பரங்கிக்காய் துண்டுகள் - ஒரு கப், புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளிக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சாம்பார் பொடியைப் போட்டு லேசாக வறுக்கவும். புளியைக் கரைத்து விடவும். பரங்கிக்காய், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் பிசைந்து, சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
பூசணி தாளிப்பு மோர்
தேவையானவை: பூசணிக்காய் கீற்று - 1, தயிர் - ஒரு கப், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: பூசணிக்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயுடன் தயிர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லி, துருவிய பூசணிக்காயைப் போட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து அருந்தவும்.
உடல் சூட்டைத் தணிக்கும் இந்த தாளிப்பு மோர்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் போளி
தேவையானவை:
மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், பரங்கிக்காய் கீற்று - 2, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - தலா ஒரு சிட்டிகை, கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், நெய் - அரை கப்.
செய்முறை:
மைதா மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து, நல்லெண்ணெய், சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகப் பிசையவும். பரங்கிக்காயைத் தோல் சீவி நறுக்கி, நெய் விட்டு வதக்கவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரை மணி நேரம் ஊற வைத்து வேக விடவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு, தேங்காய்த் துருவல், வேக வைத்த கடலைப்பருப்பு, பரங்கிக்காய், வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணம் பதத்தில் கிளறவும்.
ஒரு வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, குழவியால் வட்டமாக இடவும். உள்ளே பூரணத்தை சிறு உருண்டையாக உருட்டி வைத்து, போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல் காய்ந்ததும் போளியைப் போட்டு, இருபுறமும் நெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
படுருசியாக இருக்கும் பரங்கிக்காய் போளி.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் துவையல்
தேவையானவை:
தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பரங்கிக்காயை எண்ணெய் விட்டு வதக்கி, தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதனுடன் வதக்கிய பரங்கிக்காய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்தத் துவையலைப் பிசைந்து சாப்பிடலாம்.
தயிர் பச்சடி இதற்கு டக்கரான சைட் டிஷ்.
--------------------------------------------------------------------------------
பரங்கி-பூசணி அவியல்
தேவையானவை: பரங்கிக்காய் கீற்று, பூசணிக்காய் கீற்று - தலா 1, தேங்காய் துருவல் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, தயிர் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பரங்கிக்காய், பூசணிக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து, தயிர் சேர்த்து, வெந்த பூசணிக்காயுடன் கலக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
--------------------------------------------------------------------------------
பூசணி பருப்பு உசிலி
தேவையானவை: பூசணிக்காய் கீற்று - 2 (துருவிக் கொள்ளவும்), துவரம்பருப்பு - அரை கப், எண்ணெய் - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பருப்பு வெந்து உதிர் உதிராக வரும். இதில் பூசணிக்காய் துருவல் சேர்த்து, 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
மோர்க்குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ள உகந்தது இந்த உசிலி.
--------------------------------------------------------------------------------
தக்காளி-பரங்கி-பூசணி வெஜ் சூப்
தேவையானவை: பரங்கிக்காய் துருவல், பூசணிக்காய் துருவல் - தலா ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 1, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தக்காளியை வேக வைத்து மசித்து, தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, பூசணி துருவல், பரங்கிக்காய் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தக்காளி கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டு, நறுக்கிய கொத்தமல்லியைப் போட்டு இறக்கவும்.
குறிப்பு: இதில் வெள்ளரி, கேரட்டையும் துருவி சேர்க்கலாம்.
No comments:
Post a Comment